Lyrics

பல்லவி:
உறவுகளே ஒரு காவல்
மனதினுள்ளே ஒரு கேவல்
மறக்க முடியா கல்லூரி நட்பின்
நினைவுகளே ஒரு நாவல்

எத்தனை எத்தனை சொந்தமடா
அத்தனையும் மிக இன்பமடா
பித்தனை புத்தனை ஒன்றாய் சேர்ப்பது
நட்பு எனுமொரு பந்தமடா

சரணம்: 1
கண் திறவாத பூனைகள் போலே
ஒருவரை ஒருவர் சந்தித்தோம்
பூமியை வெல்லும் மன்னர்கள் போலே
ராஜ்ஜியம் இன்றி அரசாண்டோம்
துக்கம் மகிழ்ச்சி எதுவானாலும்
பொதுவில் ஏற்றி பங்கிட்டோம்
வெட்கம் ரோஷம் நமக்குள் ஏது
ஒன்றுள் ஒன்றாய் இணைந்திட்டோம்

சரணம்: 2
ஆயிரம் கோடி தந்தாலும் அட
அந்தக் காலம் திரும்பிடுமா
குடும்பம் குழந்தை சூழல் என்று
இருப்பதையே மனம் விரும்பிடுமா
நண்பனை பார்த்ததும் இதழ்களின் மீது
விரியும் புன்னகை அரும்பிடுமா
என்றைக்கும் அந்த இளமைப் பருவ
நினைவே நெஞ்சில் ததும்பிடுமா